வங்கதேசத்தில் பயங்கரம்... டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது!


டாக்கா மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள்

அண்டை நாடான வங்கதேசத்தில், இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் வங்கதேசத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீர் காரணமாக, அவற்றில் கொசுக்கள் பெருகி வளர்வதற்கான சாதக சூழல் கிடைப்பதால், டெங்கு காய்ச்சல் பலிகள் இந்த ஆண்டு எகிறி உள்ளன.

அரசின் அதிகாரபூர்வ தகவலின்படி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 2,10,000-க்கும் மேலானோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் சூழலில், அங்கு 1,030 பேர் டெங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டின் டெங்கு பலியான 281 என்பதோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டின் டெங்கு பலிகள் வங்கதேச அரசை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

டெங்கு

டெங்கு பரவல் காரணமாக மருத்துவர்கள் தொடர் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதோடு, அதிக வேலைப்பளுவில் சிக்கியுள்ள பொது மருத்துவர்களுக்கு உதவுவதற்காக, இதர சிறப்பு மருத்துவர்களையும் டெங்கு பணிக்கு வங்கதேச அரசு திருப்பியுள்ளது. ஓர் அவசரநிலைக்கு இணையான சூழலில் பணியாற்றி வருவதாக வங்கதேச மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்காளதேசத்தை 1960களில் இருந்தே டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வந்தபோதும், 2000-ம் ஆண்டில்தான் ரத்தக்கசிவு வாயிலான மரணத்தை விளைவிக்கும் டெங்கு வீரியம் பெற்றது.

வங்கதேசம் மட்டுமன்றி உலகம் முழுக்கவுமே காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு மட்டுமன்றி சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x