‘ஒரு கோடி லட்சியம்னு ஓடிக்கிட்டு இருக்கேன்!’


அன்று காலை, அதுவரையிலான கடன்களின் கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பாச்சா, காலைக்கடனின் அழைப்பு வந்ததும் கலக்கத்துடன் கழிப்பறையை நோக்கி விரைந்தான். அப்போது குறுக்கே வந்த பறக்கும் பைக், எதையோ யோசித்தபடி அங்கேயே நிற்க, “யப்பா... போப்பா. அர்ஜென்டா பாத்ரூம் போவணும்” என்று பதறினான் பாச்சா. “என்னப்பா நீ... காலங்கார்த்தால அனல் தெறிக்க அரசியல் பேசுறே?” என்று பறக்கும் பைக் கேட்டதும், குழப்பமடைந்த பாச்சா, “கக்கூஸுக்குப் போகணும்னு தானே சொன்னேன்... அது அரசியலா உனக்கு?” என்று கோபாவேசத்துடன் கேட்டான்.

“அண்ணன் அப்படித்தானே சொல்றார்! ‘அங்கே யார்யா சத்தம் போடுறது’ன்னு கேட்கிறதுகூட அரசியல்தானாம்” என்று அடுத்த பிட்டைப் போட்டது பறக்கும் பைக்.

“அண்ணனா... அது யாரு?” என்று கேட்ட பாச்சாவை, அண்ணாந்து குனிந்து அரை நொடி பார்த்துவிட்டு, “தமிழ்நாட்டுல லேடீஸைக்கூட ‘தம்பி’ன்னு கூப்பிடுற அளவுக்கு தமிழர்களுக்கான அண்ணனா வலம் வர்றது சீமான் தான்னு உனக்குத் தெரியாதா?” என்று சிரித்தது பைக்.

“ரைட்டு, இன்னிக்கு(ம்) அவர்தான் ஃபர்ஸ்ட்டு!” என்று பதிலுக்குச் சிரித்தான் பாச்சா.

சீமான் இல்லம்...

ஜப்பான் கம்பெனியான டொயோட்டா தயாரிப்பான ஃபார்ச்சூனர் கார் அருகே பதவிசாகப் படைசூழ நின்றிருந்தார் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பைத் தலைமீது சுமந்து உழைக்கும் சீமான்.

“அட கோபப்படாதே தம்பி! யூடியூபைத் திறந்தாலே நம்ம படத்தை வச்சுத்தான் பல வீடியோக்கள் வருது. கேட்டா ‘உங்க படத்தைப் போட்டா லட்சக்கணக்கா, கோடிக்கணக்கா லைக்ஸ் அள்ளுது’ன்னு என்கிட்டேயே(!) அள்ளி விடுறாங்க. என்ன பண்றது சொல்லு!” என்று அருகில் இருந்த தம்பியின் சினத்தைத் தணிக்க பாடுபட்டுக்கொண்டிருந்தார் சீமான்.

“அதெல்லாம் சரிதாங்கண்ணா! ஆனா, ‘ஆத்தங்கரையோரம் ஆமை ரோஸ்ட் செய்றது எப்படி’ன்னு சமையல் வீடியோவுல கூட உங்க படத்தைப் போட்டு அட்ராசிட்டி பண்றானுங்க. அதுதான் கொஞ்சம் சங்கட்டமா இருக்கு” என்று அந்தத் தம்பி ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு ஆஜரானான் பாச்சா.

“அட காணொலி மேட்டரை விடுங்க சார்! இன்னமும் உங்க புது கார் பத்தின பேச்சு போகலை போல இருக்கு. யாரைப் பார்த்தாலும் அதைப் பத்திதான் பேசுறாங்க. டொயோட்டாவே இனி ‘டார்டாய்ஸ்’னு கம்பெனி நேமை மாத்தப்போறாங்களாமே...” என்றபடி வந்த ‘வேலையை’ ஆரம்பித்தான்.

“வெறும் 18 ரூபாய் காருப்பா அது. தமிழ்த் தேசியம் பேசுறவங்கள்லாம் தாடியும், வேட்டியுமா திரியணும்னு யார்யா சொன்னா? சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு” என்றவரை இடைமறித்த பாச்சா, “என்ன சார்! 18 லட்சத்தை 18 ரூபாய் மாதிரி பகுமானமா சொல்றீங்க? சைக்கிள் வெறும் 16 ஆயிரம்னு சொல்லி சைக்கிள் கேப்ல தம்பிகளையே தடுமாறவைக்கிறீங்க! எப்படி சார் இதெல்லாம்?” என்று பொறுக்க மாட்டாமல் பொறாமையுடன் கேட்டான் பாச்சா.

“அதை விடு தம்பி! இந்தா... ‘வீட்டுல தேசியக் கொடி கட்டுங்க’ன்னு சொல்லுது மத்திய அரசு. எனக்கே ஒரு வீடு இல்லை. வாடகைக்கும் கிடைக்க மாட்டேங்குது. கார்ல ஒரு துண்டு துணியைக் கட்டிட்டா முடிஞ்சிச்சி. அதுக்காண்டிதான் கார் வாங்குனது. வெளங்கிக்கிடணும்” என்றார் சீமான்.

“ம்க்கும். ஒரு துணியைக் கம்பத்துல கட்டிட்டா தேசபக்தி வந்துடுமான்னு கேட்டிருக்கீங்க. அப்படீன்னா உங்க கட்சிக்குன்னு ஒரு கொடியை ஏத்திட்டு உலகப்போர்ல ஜெயிச்ச மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பேசுறது மட்டும் சரியா?” என்று கேட்டான் பாச்சா.

சற்று நேரம் அமைதிகாத்த சீமான், “தம்பி... தமிழர் வரலாறு தெரியாம தகராறு பண்ணப்படாது. நானெல்லாம் திமுகவுக்கே கொடி பிடிச்ச ஆளு. ஒருவேளை திமுகவுல இருந்திருந்தா நான் அமைச்சராக்கூட ஆகியிருக்கலாம். ஆனா, என் லட்சியமே வேற” என்று சொல்லிவிட்டு மாஸ்க் போட்ட மூத்த தம்பியின் முகக்குறிப்பை அறிய முற்பட, அவர் ‘ஆமாமமாமாமா’ என்பது போல் அத்தனை முறை ஆதரவாகத் தலையாட்டினார்.

சட்டென சவுக்கு சங்கர் பாணிக்கு மாறிய பாச்சா, “இருந்துட்டுப் போகட்டும்! ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம்னு சொன்னவர் நீங்க. அவர் கவர்னரைப் பார்த்துப் பேசுறதே அரசியல்தான்னும் ஒத்துக்கிறீங்க. அப்படின்னா அவரை அதுக்காகவே எதிர்க்கலாமே? ஆனா அவருக்கு ஆதரவா பேசி தமிழருவி மணியனுக்கே டஃப் கொடுக்கிறீங்க... என்னதான் சார் உங்க அரசியல்? எல்டிடிஈ கிட்ட அப்படி என்னதான் ட்ரெய்னிங் எடுத்தீங்க?” என்று கேட்டான்.

“தம்பி... ஒரு கோடி லட்சியம்னு ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சீமான் பேசுகையில் மீண்டும் குறுக்கிட்ட பாச்சா, “இப்பெல்லாம் கோடிங்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துறீங்க. கோடிச் செய்தி, கோடி ஓட்டுன்னு எதையோ கோடிட்டு காட்டுற மாதிரி இருக்கே?” என்று கேட்க,

“கத்திக் கத்திப் பேசுனாலும் எலெக்‌ஷன்னு வந்தா எங்களைக் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. ஒருவேளை எனக்கு மட்டும் ஒரு கோடி ஓட்டு வந்து... நான் வந்துட்டேன்னா...” என்று சீமான் சைலன்ட் விட்டதும் சப்தநாடியும் அடங்கியது பாச்சாவுக்கு.

அடுத்து உதயநிதி.

“ஹா(ன்) ஜி... ஹா(ன்) ஜி! நம்மள் மேலே இந்தியைத் திணிச்சாத்தான் நாங்க திமிறிக்கிட்டு வருவோம் ஜி. மத்தபடி இந்திப் படம்னா கொள்கையையெல்லாம் கொல்லைப்புறத்துல வீசிட்டு முந்திக்கிட்டு வந்து முதல் ஷோ பார்ப்போம்ங்க. என்னோட அடுத்த படமே இந்தி படம்தாங்க ஜி. உதயநிதி - பரீணிதி ஜோடி. எப்படி ஜி?” என்று பாலிவுட் பெருந்தலை ஒருவரிடம் பாசமாகப் பேசிக்கொண்டிருந்தார் ‘ஆக்டிங்’ அமைச்சர்.

அதைக் கேட்டுக்கொண்டே ஆஜரான பாச்சா, “என்ன சார் நீங்க! 5ஜி-யே இப்பத்தான் வரப்போகுது. நீங்க இத்தனை ஜி போட்டு மும்பைவாலாக்களுக்குக் கொம்பு சீவிவிடுறீங்களே. பிசினஸ்னு வந்துட்டா நாத்திகக் கொள்கைக்கு நாமம் போடுறது, மொழிக் கொள்கைகளை மூட்டை கட்டுறதுன்னு பின்னியெடுக்கிறீங்களே!” என்றான்.

“இதோ பாருப்பா! நான் நம்மூர்ல எடுக்கிற படங்கள்ல நாளொன்றுக்கு நாலுங்கிற ரேஞ்சுல வாங்கி நல்லவிதமா டிஸ்டிரிபியூட் பண்ணிட்டு இருக்கேன். நம்ம திறமையைப் பார்த்துட்டு பாலிவுட், ஹாலிவுட், ஜாலிவுட்னு எல்லா வுட்காரங்களும் விடாம துரத்தி, படங்களை வாங்கிக்கச் சொல்றாங்க. என்ன பண்றது! நாலு பேரு நல்லா இருக்கணும்னா திமுககாரங்க தியாகியா மாற வேண்டியிருக்கே...” என்று சலித்துக்கொண்டார் உதயநிதி.

“அதுக்காண்டி கொள்கையையும் தியாகம் பண்றதா?” என்று பாச்சா கேட்டதும், “அப்படி இல்லப்பா. விரும்பி எதையும் செஞ்சா தப்பில்லை. வீம்புக்குத் திணிச்சாதான் வீறுகொண்டு எழுவோம். இதுதான் எங்க கொள்கை” என்று பதமாகச் சொன்னார் உதயநிதி.

“அதெல்லாம் சரிதான். உங்ககிட்ட படம் கொடுக்கிறவங்கள்லாம் விரும்பித்தான் அதைச் செய்றாங்களா?” என்று பாச்சா கேட்டதும், உதயநிதி உக்கிரநிதியாக மாற... ஒரே ஓட்டமெடுத்தான் பாச்சா!

x