“ஆலய பிரவேசத்துக்குப் பிறகே மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார் காந்தி” - அருங்காட்சியக செயலர் தகவல்


மதுரை: "ஆலய பிரவேசத்திற்கு பிறகே காந்தி மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார்" என்று காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் கூறியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள், ஒடுக்கப்பட்டோரை தடையை மீறி அழைத்துச் சென்ற "ஆலய பிரவேசம்" நிகழ்வு நடைபெற்ற 85-வது ஆண்டு விழா மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சூ.வானதி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ஆலயப்பிரவேசம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 1946-ல் வந்த காந்தியடிகள் மீனாட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள அப்போதைய சிவகங்கை அரண்மனையில் 3 நாட்கள் தங்கி இருந்ததை நினைவு கூர்ந்தார்.

பின்னர் காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் கே.ஆர்.நந்தா ராவ் பேசுகையில், "இந்தியாவிலேயே முதன் முதலில் ஒடுக்கப்பட்டோர் தடையை மீறி ஆலயத்திற்குள் செல்லும் வகையில் ஆலய பிரவேசம் நடைபெற்ற இடம் மதுரை. காந்தியடிகள் மதுரைக்கு 5 தடவை வருகை தந்த போதிலும் ஒடுக்கப்பட்டோர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தை அறிந்து முதல் நான்கு முறையும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அவர் செல்லவில்லை.

ஆலய பிரவேசம் மதுரையில் நடைபெற்றது என்பதை அறிந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்காகவே தனது ஐந்தாவது வருகையை திட்டமிட்டார். கல்லூரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் தங்கி இருந்த அப்போதைய சிவகங்கை அரண்மனையை பாதுகாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.

காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளர் மா.செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும் மற்றும் தமிழ் துறை தலைவருமான முனைவர் யாழ் சு.சந்திரா, கல்லூரியின் கணிதத்துறை தலைவரும் காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கு.முத்துப்பாண்டியன், காந்தி நினைவு அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் முனைவர் ஆர்.தேவதாஸ் மற்றும் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.