நிழற்சாலை


பசி நிமித்தம்

அந்தப் பழமுதிர் நிலையத்தில்

பணியிலிருக்கும்

சிறுவனுக்கு அப்படி ஒன்றும்

பெரிய வேலையில்லை!

ஒருமணி நேரத்திற்கு

ஒருமுறை

காஷ்மீர் ஆப்பிளை

நகம் படாமல்

நன்கு துடைத்து

அடுக்கி வைக்க வேண்டும்

அவ்வளவே!


ஆனாலும்

பசிக்கும் வயிற்றின்

இரைச்சலை அடக்க முடியாமல்

அப்போதெல்லாம்

தடுமாறத்தான் செய்கிறான்

அச்சிறுவன்.


-கோவை.நா.கி.பிரசாத்

காற்றின் இசை

திருவிழா முடிந்த

மறுநாள்

கோயில் திடலில்

யாரோ ஒரு குழந்தை

தவறவிட்டுப்போன

புல்லாங்குழலில்

நுழைந்து நுழைந்து

இசைத்துப் பழகுகிறது

காற்று.

- காசாவயல் கண்ணன்

செய்தி

காற்றில் இழுத்து வரப்படுகிற

சருகுகள் அழுதபடியே

செய்திகள் சொல்கின்றன...

வனங்களில் இலைகள்

துளிர்ப்பதற்கு மரங்கள்

எதுவும் மிச்சமில்லையென்று!

- ச.ஆனந்தகுமார்

கையில் ஒட்டும் கண்ணீர்

வெட்டுப்பட்ட மரம்

அடுத்த நாள் காயத்தில்

கண்ணீர் விட்டு அழுதிருக்கிறது

பிசின் என்றும்

கோந்து என்றும்

உங்களுக்குப் பிடித்தது போல

பெயர் வைத்துக்கொள்கிறீர்கள்!

- மகேஷ் சிபி

தருணம்


விரும்பி வளர்த்த

செடியொன்று

பூப்பூத்திருந்தது...

வீட்டைக் காலி செய்த நாளில்!


- மு.முபாரக்

ரசனை

பூவரசம் பீப்பி செய்து

ஊதி ஊதி

மகிழ்கிறாள் சிறுமி

கேட்டுக் கேட்டு

ரசிக்கிறது

கிளையில் இளைப்பாறும் குயில்!

- சாமி கிரிஷ்

x