புதுச்சேரியில் பாரம்பரியமான ரிக்‌ஷாவில் கூரை போட்டு பயணிக்கும் ரஷ்ய குடும்பம்


புதுச்சேரி: புதுச்சேரியில் பாரம்பரிய ரிக்‌ஷாவில் கூரைபோட்டு ரஷ்ய குடும்பம் ஒன்று பயணித்து வருவதை மக்கள் வியப்புடன் மக்கள் பார்வையிடுகின்றனர்.

உலக மக்கள் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவை ஆரோவில் சர்வதேச நகரம் மூலம் நனவாக்கியவர் ஸ்ரீஅன்னை. இங்கு பல வெளிநாட்டவர் ஆரோவில் வாசிகளாகவே மாறி அவர்களுக்கு தெரிந்த வேலைகளை செய்துகொண்டு அங்கேயே வசித்து வருகின்றனர். அப்படி வசிக்கும் ரஷ்யர்கள் தான் செர்க்கே - தான்யா தம்பதி. இவர்கள் பயணிப்பது ஏசி காரோ விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது.

நமது பாரம்பரிய ரிக்‌ஷாதான். ஆரோவில் ஆட்டோமொபைல் பணிமனையில் வேலை செய்யும் செர்க்கே வடிவமைத்த கூரை போட்ட ரிக்‌ஷாவில் தான் அவர்களின் குடும்பமே பயணிக்கிறது. அவரது மனைவி தான்யா ஒரு ஓவியர். இவர்களுக்கு 3 குழந்தைகள். ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு இவர்கள் அனைவரும் இந்த கூரை ரிக்‌ஷாவில் தான் வந்து செல்கின்றனர்.

இந்த ரிக்‌ஷாவில் வெயில் மழை தாக்காத வகையில் மேல் கூரையும், பக்கவாட்டில் தடுப்புத் திரையும் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை கி.மீ. தொலைவாக இருந்தாலும் செர்க்கே தானே ரிக்‌ஷாவை மிதித்து ஓட்டிச் செல்கிறார். இவர்களின் கூரை ரிக்‌ஷா நகரத்து வீதிகளில் செல்வதை புதுச்சேரி மக்கள் வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.