தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் இன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியே புகை மண்டலமானது. இதனால் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் வீட்டுக்கு வீடு முகக்கவசம் வழங்கியது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குப்பைக் கிடங்கில் ஆண்டுதோறும் கோடை மற்றும் காற்று வீசும் காலங்களில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம், மேலவீதி, மேல அலங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்படுவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்தக் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசுவதால் தீ மளமளவென அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி வருகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் மேலும் வீட்டில் இருப்பவர்களும் சாலையை கடப்பவர்களும் புகையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகைமூட்டம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் முகக் கவசம் வீடு வீடாக வழங்கப்பட்டது.