சென்னை: சென்னை அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியை தன்னார்வ அமைப்பின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதில்,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் பங்கேற்று தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது தன்னார்வலர்கள், மாணவர்கள் உடன் இணைந்து ஆட்சியரும் கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.அப்போது, நெகிழிப் பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர், “கடல் வளத்தை பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடுகிறது. அவற்றை பாதுகாக்க கடற்கரை மற்றும் கடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என்றார்
கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா தன்னார்வ அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.