இணைந்திருத்தல்
மீன்குழம்பை வாசனை பிடித்தபடியே விரதம்
கண்ணாடி வளைச் சிணுங்கல்களைக் கடந்தவாறு
தனிமை இரவின் கனம் சுமத்தல்
பெருஞ்சண்டையினூடே நகைச்சுவைத் திரைப்படம்
பக்திப் பாட்டு கேட்ட காதோடு
சில கெட்ட வார்த்தைகள்
குளியலறை நீர்ச் சிலுப்பல் காதில் விழ மதியத் தூக்கம் என
துருவங்களை முடிச்சிட்ட
முரண்மூட்டைகளை எளிதாய்ச் சுமக்கின்றன
ஒண்டுக்குடித்தனங்கள்.
- கி.சரஸ்வதி
சகுனம்
விருட்டென்று
குறுக்கே ஓடியதற்கு
இலக்கு மட்டுமே
தெரிந்திருக்க
வேண்டும்...
அமர்ந்துவிட்டுச்
செல்லும்போது
தொலைந்துவிடுகின்றன
எனக்கான பூனைகள்!
- ரகுநாத் வ
நீரின் வாசம்
கடைசி இலையும்
உதிர்ந்த மரத்தில்
துளிர்விடும் பச்சையத்தில்
நீர்த்துளிகளின் வாசம்!
- நேசன் மகதி
சாயல்...
வண்ணங்களால்
நிரம்பி வழிந்து
பிரகாசமாக இருந்தன
பலூன்கள் விற்கும்
சிறுவனின் கைகள்
சற்றே உற்று
நோக்க கிழிந்த
அவனாடையில்
வண்ணங்களை
மறைத்திருந்தது
கருமை பொருந்திய
வறுமையின் சாயல்...
- கா.கவிப்ரியா
தொலையும் பால்யங்கள்
பொம்மைகள்
வார்த்தை விளையாட்டு
கேரம்
சதுரங்கம்
பல்லாங்குழி
சீட்டுக் கட்டு
தாத்தா
பாட்டி...
எல்லோரையும் அநாதைகளாக்கி
மொத்த குழந்தைகளும்
பால்யத்தைத் தொலைக்கின்றன
ஒளித்தோற்ற விளையாட்டிற்குள்!
- ஆனந்த குமார்
கடவுள் மீதான கருணை
பத்தி கற்பூரம் போக
எலுமிச்சை இரண்டாம்பட்சம்தான்
தேங்காய் இல்லன்னாலும்
கோபம் வராது
பழமே போதும்
பக்திக்கு
அருள்வாக்கு சொல்கையில்
குவாட்டர் பாட்டில்
வைக்காத படையலுக்கு
வரம் தர மாட்டார் பூசாரி
பூஜை முடிந்து திரும்புகையில்
ஷிவனிதாவின் ஒரே கவலை
கண்ணாடித் துண்டுகள்
நிறைந்த பாதையில் எப்படி
இராவேட்டைக்குப் போவார்
சுடலைமாடன்?
-ந.சிவநேசன்
தந்தைமை
வண்ணத்துப்பூச்சிகளைக்
கண்டதும்
சிறகுகள்
முளைத்துவிடுகிறதென்கிறான்
இப்போதெல்லாம்
இறுகப் பற்றிக்கொள்கிறேன்
மகனின் கரங்களை!
- மு.முபாரக்
வேலை
வந்து செல்பவர்களுக்குத்தான்
அது கட்டணக் கழிப்பிடம்...
காசு வாங்கி
மேசை டிராயரில் போடும்
கேசவமூர்த்திக்கும்
துடைப்பத்தோடு
கூட்டிப் பெருக்கும்
வள்ளியம்மாளுக்கும்
அது ஆபிஸ்தான்!
- கமலக்கண்ணன்.இரா