பாவனை
கண்சிமிட்டாமல்
காத்துக்கொண்டிருக்கிறது
கழுகு
மரக்கிளையில் அமர்ந்தபடி..
குஞ்சுகள் குறுநடை நடந்து
குப்பைகளை கூர் உகிர் விரலால்
கிளறி கொத்தித் தின்ன
வெகு சாமர்த்தியமாகக் காவலிருக்கிறது
தாய்க் கோழி
மரக்கிளையில்
ஒரு கண்ணும் குஞ்சுகள் மீதொரு
கண்ணுமென
பசியாற்றும்
பாவனை செய்தபடி...
- கவிப்ரியா
ஆடும் கூத்து
விடிய விடிய வடம்பிடித்த தேருக்கு முன்
உடுக்கை
சத்துக்குழல்
செண்டை
பறை
நாகஸ்வரம்
என வழிந்துகொண்டேயிருக்கிறது இசை
சுழன்றாடுகின்றன
பொய்க்கால் குதிரையும்
காவடியாட்டமும்
விதைகளிட்ட பித்தளைச் செம்பு
கீழே விழாமல் லாவகமாய்
ஆடுகின்ற கரகாட்டப் பெண்களின்
நடனமொழியில்
கிறங்கியிருக்கிறது கூட்டம்
குடக்கூத்தில்
சமநிலையோடு ஆடுகின்ற கலைஞர்கள்
தொன்மக் கலைகளை
உயர்த்திப் பிடிக்கிறார்கள்
உயர்நிலை அடையாதொரு
வாழ்வியலை இறுக அணைத்தபடி!
- கா.ந.கல்யாணசுந்தரம்
தியானக் கூடத்தின் பகல்
செய்தித்தாள் கலைந்து கிடக்கும் மரபெஞ்ச்
வரவேற்பறையாகிட
தியானத்தில் ஆழ்ந்திருப்பவன் எழும்வரை
காத்திருக்கும் அவஸ்தையும் தியானமாகிறது
நுரையிடும் நுட்பத்தை ரசிக்கும் சிறுவன்
முடி உதிரும் சொகுசில்
சொக்கி விழுகையில்
விழிப்புக்கும் உறக்கத்துக்கும்
இடையே ஆடுகிறது ஊஞ்சல்
சீப்பின் பற்கள்
ஆர்மோனியக் கட்டைகளாய்
மெல்லிசை மீட்டி முடிக்கையில்
கத்திரிக்கோலின் முறை
உச்சஸ்தாயியில் தொடங்குகிறது
பழுப்பேறிய கண்ணாடியில்
முகம் பார்த்துக்கொள்பவர்களின்
தலையாட்டலில் தணிகிறது
நாளின் முதல் பசி
வேலையற்ற நாட்களில் ஒன்றை
ஓய்வாக்கிக்கொள்பவனின் வாழ்வில்
ஞாயிற்றுக்கிழமை என்பது
எப்போதும் ஞாயிற்றுக்கிழமை ஆவதேயில்லை.
-ந.சிவநேசன்
முற்றம் தொலைத்த வீடு
ஒவ்வொரு மார்கழி மாத
அதிகாலைப் பொழுதுகளிலும்
வாசல் பெருக்கி
முற்றத்தில் சாணம் தெளித்து
கோலமிடுவாள் வசுமதி அக்கா
சங்குக் கோலம் மயிற்கோலம்
ரங்கோலியென நாளுக்கொன்றாக
வித்தியாசம் காட்டுவாள்
நெற்றியில் திரண்டு விழும் கேசத்தை
மணிக்கட்டால் ஒதுக்கியபடியே
மாக்கோலமிடும் அவள் அழகைக் காண
அதிகாலை உறக்கத்தைத்
தொலைத்த இளைஞர்களால் வீதி நிறையும்
பட்டணத்து மாப்பிள்ளைக்கு
வாக்கப்பட்டுப்போனவளுக்குப்
பொங்கல் சீர் வரிசை கொடுக்கச் சென்றபோது
கவனித்தேன்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த
வாசல் முற்றமில்லாத வீட்டில்
கோலமிட வழியுமின்றி
ஒட்டி வைத்திருந்தாள்
கையளவு ஸ்டிக்கர் கோலத்தை.
-வெ.தமிழ்க்கனல்
அக்னிசாட்சியாய் ஓர் அத்துமீறல்
நெருப்புப் படுக்கையின் அனலில்
மரத்துப்போன விரல்களால்
தேநீர்க் கோப்பையை சாதாரணமாக
நீட்டுகிறாள் மனைவி
தொட்டவுடன் விரல்களை உதறிக்கொள்ளும்
கணவனுக்கு நினைவிருக்குமா
நெருப்பை முன்மொழிந்த
இறந்துபோன இரவுகள்?
- நல முத்துகருப்பசாமி
தனிமை
உதிர்ந்து மிதக்கிற இறகின்
சலனமற்ற புன்னகைப் பயணம்
மவுனத்தின் நீட்சியில்
பூக்கின்ற மகரந்தம்
வாழ்வியலின் அர்த்தத்திற்காய் மனதை
ஒருமுகப்படுத்திய தனிமை
ஒரு சிறு குறுஞ்செய்தியில்
திசை திருப்பிய அலைபேசி
மொத்தத் தனிமையையும்
அடித்துச் செல்கிறது
ஆழிப் பேரலையாய்!
- ஆனந்தகுமார்
நீர்க்கதைகள்
நதியின் கதைகளை
கதைத்துக்கொண்டிருக்கின்றன
கூழாங்கற்கள்
வளர் மீன்களிடம்
'உம்' கொட்டுகிறது
கண்ணாடித் தொட்டி.
நள்ளிரவு புரள்கிறது
சத்தம் கேட்டு.
- இரா மதிபாலா
அலை ஆறுதல்
விரக்தியோடு
வெற்றுப் பார்வையை
கடலுக்குள் செலுத்தியபடி
கரையில்
அமர்ந்திருக்கிறார்கள் சிலர்
நானும் துக்கமொன்றை
மடியிலிருத்திக்கொண்டு
மணலில் அமர்கிறேன்
இப்போது
ஆறுதலாகத்தானிருக்கிறது
சற்று முன் எரிச்சலூட்டிய
இந்தக் கடலின் இரைச்சல்
- மகேஷ் சிபி
நடமாடும் நட்சத்திரங்கள்
இறந்த அப்பாக்கள்
நட்சத்திரமாகிவிடுவார்களென
யாரோ சொல்ல கேட்ட
இரவொன்றில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எல்லையற்று விரியும்
வானத்துள்
பார்வை பதித்தபடி
என்னைப் பார்த்துப்
புன்னகைத்த
நட்சத்திரம் ஒன்று
நகரத் தொடங்க
என்னைத் தேடி
மாடிக்கு வந்து நிற்கிறான்
மகன்!
- மு.முபாரக்
கால் நனைக்கும் கடலலைகள்
கால் நனைத்த கடலலைகள்
நீண்ட மணற்பரப்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கென
அமைக்கப்பெற்ற
பாதையின் வழியே
கைகளைக் கால்களாக்கி
சக்கர நாற்காலியின்
இரு சக்கரங்களையும்
நகர்த்திச் சென்று
பொங்கு கடலின்
முனையொன்றைக்
கால்விரலில் பூவெனத்
தொடுகிறது சிறு குழந்தை
கால் நனைத்துக்கொள்கின்றன
கடல் அலைகள்!
- நேசன் மகதி
கட்டிடக் காடு
நீண்ட நெடுநேரமாய்க்
கட்டிடக் காட்டுக்குள்
மரங்களைத் தேடியலையும்
சிறு பறவைக்கு
இளைப்பாற இடமளித்திருக்கிறது
இரும்புக் கம்பியொன்று
ஒளி ஒலி அலைகளை மட்டுமே
ஊடு கடத்தும் அவ்வுணர்கொம்பு
அச்சிற்றுடலையும்
சிற்றுயிரையும் ஏந்தி நிற்க
நிகழ்காலம் உயிர்த்தெழுகிறது
கண்முன்னே
சில நொடிக்குள்
பெரு மரக்கிளையொன்று
விரிந்து படர்ந்து கலைகிறது!
- வேலணையூர் ரஜிந்தன்