தொடர் மழை எதிரொலி: மீண்டும் பசுமைப் போர்வை போர்த்திய முதுமலை புலிகள் காப்பகம்


முதுமலை: தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி தற்போது மீண்டும் பசுமைப் போர்வை போர்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகும். இந்த முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் இந்த சாலை 23 கிலோ மீட்டருக்கு இரண்டு பக்கமும் அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே செல்லக் கூடியதாகும். இந்தப் பகுதியானது கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலில் வறண்டு காணப்பட்டது. இதனால் வனவிலங்குகளின் குடிநீர், உணவு தேவை பூர்த்தியாகாததால், அவை வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.

இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது தொடர் மழை காரணமாக பச்சை பசேலென கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக மாறி உள்ளது. கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்த்த கோடை மழையால் இப்பகுதியில் உள்ள குட்டைகள், சிறிய தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதோடு, வனப்பகுதிக்குள் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் நீங்கியுள்ளதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியவதாவது, "கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கடும் வறட்சி நிலவியது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கேரளா, கர்நாடக வனப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன. தற்போது பெய்த கோடை மழையால், வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. வனப்பகுதிக்குட்பட்ட மரவக்கண்டி நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், உணவு தேடி இடம்பெயர்ந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள், முதுமலைக்கு திரும்பி வருகின்றன." என்றனர்.

இதனிடையே, முதுமலை வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக புள்ளி மான்கள் சாலை ஓரங்களில் உணவு உண்டவாறு ஓய்வெடுக்கும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.