திருமண கோலத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய மணப்பெண் @ காஞ்சிபுரம்


சுங்குவார்சத்திரம் பகுதியில் திருமணக் கோலத்தில் தேர்வு எழுத வந்த பெண்.

காஞ்சிபுரம்: காஞ்சிபும் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வை பெண் ஒருவர் திருமணம் முடிந்த கையோடு திருமணக் கோலத்தில் வந்து எழுதினார்.

தமிழ்நாடு அசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 96 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 40,721 இளைஞர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு வரும்போது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுடன் அசல் அடையாள ஆவணம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மொபைல் போன், மின்னணு கடிகாரம், மின்னணுப் பொருட்கள் எதையும் உள்ளே தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே சுங்குவார்சத்திரம் அருகே கண்ணுார் கிராமத்தை சேர்ந்த சியாமளா (22) அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்காக படித்து வந்தார். இந்நிலையில் சியாமளாவுக்கு கதிரேசன் என்பவருடன் இன்று காலை 7.30 மணிக்கு சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சியாமளா திருமணம் முடிந்த கையோடு குன்றத்தூர் அருகே புதுப்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்துக்கு திருமண கோலத்திலேயே தேர்வு எழுத வந்தார். அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை அவரது கணவர் கதிரேசன் வெளியே காத்திருந்து தேர்வு முடிந்ததும் மனைவியை அழைத்துச் சென்றார்.