ஜெயலலிதாவின் நடையும்... விஜயசாந்தியின் நாட்டாமையும்..!


இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆளுமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் முக்கியமான கல்லூரி, அரசினர் மகளிர் கலைக்கல்லூரி. 1969ம் ஆண்டு புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்டு, 1972ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டு ‘கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரி’யாக மாறி, மறுபடியும் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியாக மாறிய கல்லூரி இது. ஐந்து பிரிவுகளோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி தற்போது 13 துறைகள், 4,600 மாணவிகள், 132 பேராசிரியர்கள் என்று பிரம்மாண்டமாய் இயங்கிவருகிறது.

ஒளிவீசி உயரணும்

நாம் நுழைந்தபோது, கல்லூரி வளாகம், மரநிழல், கேண்டீன் என எங்கும் மாணவிகளின் நடமாட்டமே இல்லை. பள்ளிக்கூடம் போல அமைதி. மாணவிகள் அத்தனை பேரும் வகுப்பறைக்குள்ளும் நூலகத்துக்குள்ளும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த அமைதியைக் கிழித்தது சலங்கை ஒலி. திரும்பிப் பார்த்தால், தமிழ்த்துறை மாணவிகள் யுவராணி, உஷா, ஐஸ்வர்யா, கனிமொழி, அர்ச்சனா உள்ளிட்ட கரகாட்டக் குழுவினர் கரக ஒத்திகை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். கல்லூரியின் அத்தனை நிகழ்வுகளிலும் தாங்களும் ஆடி மற்ற மாணவிகளையும் உற்சாக ஆட்டம்போட வைக்கும் இவர்கள் நம்மைப் பார்த்ததும், “காமதேனு வாழணும், கருத்தாக வளரணும், ஊருக்கெல்லாம் உண்ம சொல்லி ஒளிவீசி உயரணும்” என்று வாழ்த்தினார்கள்.

x