புதுச்சேரி: மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைக்கு தேவையான அரிய வகை ரத்தத்தை தானமாக அளித்து உயிர் காத்த எம்எல்ஏ சம்பத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
புதுவையில் தனியார் மருத்துவமனையில் பிறந்து மூன்றே நாட்களே ஆன குழந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைக்கு மிகவும் அரிதான 'ஓ நெகடிவ்' வகை ரத்தம் தேவைப்பட்டுள்ளது. உறவினர்கள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.
இதனிடையே, குளுனி மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் சுதாகர் ரெட்டி ரத்த தானம் செய்வோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தோரை தொடர்பு கொண்டுள்ளார். அப்பட்டியலில் இருந்த திமுக இளைஞரணி மாநில அமைப் பாளரும், முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்திடம் மருத்துவர் தொடர்புக் கொண்டு நேற்று இரவு பேசியுள்ளார். அவசரமாக ரத்தம் தேவை என்று தெரிவித்ததால் நேற்று நள்ளிரவே மருத்துவமனை சென்று எம்எல்ஏ சம்பத் தனது ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக எம்எல்ஏ சம்பத் கூறுகையில், ”எனக்கு அரிய வகை பிரிவான ”ஓ நெகட்டிவ்” ரத்தம் என்பதால், தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறேன். தொடர்ந்து ரத்த தானம் செய்வதால் குருதி கொடையாளர் பட்டியலில் உள்ளேன். நள்ளிரவில் தொடர்பு கொண்டு குழந்தைக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாக தெரிவித்தால் உடனடியாக சென்று ரத்தத்தை தானமாக வழங்கினேன்.
பொதுவாக, ரத்த தானம் தரும்போது அதை பெறுவோர் விவரம் கேட்டறிய மாட்டேன். குழந்தைக்கு தேவைப்பட்டதால் உடல் நலம் குறித்து இன்று காலை மருத்துவனையை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். பொதுமக்கள் அனைவரும் தாமாக முன் வந்து ரத்த தானம் செய்வது அவசியம்" என்று எம்எல்ஏ சம்பத் குறிப்பிட்டார்.