நாப்கின்களுக்கான எரியூட்டிகளை உருவாக்க சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி தரும் பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி!


புதுச்சேரி: நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்றும் எரியூட்டிகள் உருவாக்கும் பயிற்சியை தமிழக சுய உதவிக் குழுக்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த சுடுமண் சிற்ப கலைஞரான பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி பயிற்சி தருகிறார்.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் குப்பையாக உருவாகின்றன. குறிப்பாக நாப்கின்கள், மக்கி அழிய நீண்ட காலம் எடுக்கும். பல இடங்களில் சானிட்டரி நாப்கின்கள் குப்பையில் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. நாப்கின்கள் மக்கி அழிய நீண்ட காலம் எடுப்பதால், அவை நிலப்பரப்பு மற்றும் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.

குப்பையில் முறையாக அப்புறப்படுத்தப்படாத நாப்கின்கள், சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு காணும் வகையில் மண் அடுப்பிலான எரியூட்டியை புதுச்சேரி சுடுமண் சிற்ப கைவினை கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி உருவாக்கியுள்ளார்.

இது பற்றி முனுசாமி கூறுகையில், "புதுச்சேரியில் முருங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசின் கைவினை கிராமத்தில் எரியூட்டியை உருவாக்குவது குறித்த பயிற்சியினை தருகிறேன். இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மொத்தமாக 1 கோடி அடுப்புகள் தேவைப்படும். இந்த எரியூட்டிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைத்துள்ளோம். இதர மாநிலங்களில் ரூ.3,000 வரை விற்பனையாகும் இந்த அடுப்பு புதுச்சேரியில் ரூ.450 செலவில் தயாரிக்கப்படுகிறது. நாப்கினை இலவசமாக அளிக்கும் தமிழக அரசு இந்த அடுப்பை இலவசமாக தர வேண்டும்" என கோருகிறார்.

x