தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் சார்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் நேற்று இரவு ‘மிஸ் கூவாகம் - 2025’ போட்டி நடைபெற்றது.
தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்புத் தலைவி மோகனாம்பாள் நாயக் தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அருணா நாயக் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், சின்னத்திரை நடிகை தேவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவன் - பார்வதி பக்தி பாடலுடன் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக தொடங்கின. இந்நிகழ்வில் திருநங்கைகளுக்கு நினைவு பரிவு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேடையில் பாடல்கள் ஒலித்த போது, விழா அரங்கில் இருந்த திருநங்கைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கூட்டத்தில், ‘திருநங்கைகளின் நலனுக்காக தனிக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி விழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான திருநங்கை ஆல்ஹா பேசும்போது, “திருநங்கைகளுக்கான உரிமை பாதுகாப்புச் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக, திருநங்கைகள் நலவாரியம் உருவாக்கிய நம் தமிழகத்தில், திருநங்கைகளின் நலனுக்கான தனிக் கொள்கை உருவாக்கப்படவில்லை. அதே நேரத்தில் மகாராஷ்டிரா, ஓடிசா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் தனிக்கொள்கைகளை அம்மாநில திருநங்கைகளுக்காக உருவாக்கியுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் தனி இடஒதுக்கீடு வழங்கும் வகையில் எங்களுக்கான தனிக்கொள்கையை தமிழக அரசு விரைவாக உருவாக்க இந்த தருணத்தில் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.
‘மிஸ் கூவாகம்’ முதல் சுற்றுப் போட்டியில் 25 திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்களில் 15 பேர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் 7 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவரும் பட்டுப்புடவை மற்றும் நாகரிக உடையணிந்து, சிறப்பான ஒப்பனையுடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை அசத்தினர்.
போட்டியில் பங்கேற்ற திருநங்கைகளிடம் பொது அறிவு மற்றும் சமுதாய நலன் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. திருநங்கைகளும் அதற்கு சிறப்பாக பதிலளித்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பார்வையாளர்களாக இருந்த திருநங்கைகள் கரவொலி எழுப்பினர். இரவு 9 மணியை கடந்தும் அழகிப் போட்டி நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர்.