கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா - விழுப்புரத்தில் குவிந்த திருநங்கைகள்!


கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் திருநங்கைகள் குவிந்துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ளது.இக்கோயிலில் சித்திரை பெருவிழா, சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 29ம் தேதி, தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று (மே 12) மாலை சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் திருமாங்கல்யம் ஏற்று கொள்ளுதல் நிகழ்வும் மற்றும் மறுநாள் (மே 13) காலை திருத்தேரோட்டமும், அரவான் பலியிடுதல், மாங்கல்யம் அறுத்தல் போன்ற நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆயிரம் திருநங்கைகள், விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘மிஸ் கூவாகம்’ மற்றும் ‘மிஸ் திருநங்கை’ போட்டி, விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் திருநங்கைகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் போட்டியை, பல நூறு திருநங்கைள் பார்வையிட்டு ஆராவரம் செய்தனர். திருநங்கைகளின் வருகையால், விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்துள்ளது.

பொருட்களை வாங்க, சாலைகளில் திருநங்கைகள் ஓய்யாரமாக நடந்து சென்றனர். பட்டு புடவை, நாகரீக ஆடை மற்றும் கவர்ச்சி ஆடையணிந்து நடந்து சென்றது, மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் ஒரு சிலர் வாகனங்களை பயன்படுத்தினர். திருநங்கைகளின் ஒப்பனை என்பது, திரை நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவில் இருந்தது. தலையில் மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களை, திருநங்கைகள் விரும்பி சூடிக் கொண்டனர். திருநங்கைகளை பின்தொடர்ந்து, இளைஞர்கள் கூட்டம் வட்டமடித்தது. அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

திருநங்கைகள் கூறும்போது, ”சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், எங்கள் மீதான தவறான பார்வை தொடர்வது வேதனை அளிக்கிறது. எங்கள் நிலையில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால், எங்களையும் எங்களது பெற்றோர் அரவணைக்க வேண்டும். அவர்கள் அரவணைத்தால், நாங்களும் மற்றவர்களைப் போன்று படித்து, வேலைக்கு செல்ல முடியும். பெற்றோர் ஒதுக்கிவிடுவதால், எங்களது பாதை மாறிவிடு கிறது. எங்களது வாழ்வை தொலைத்து விடுகிறோம்.

எங்களுக்குள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்பது, இயற்கையானது. இதனை புரிந்து கொண்டு, எங்களை பெற்றோர் அரவணைக்க வேண்டும். தமிழக அரசும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். கல்வி ஒன்று தான், வாழ்க்கையில் சிறந்த ஆயுதம். திருநங்கைகள் அனைவரும் படிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

x