ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹீமோபிலியா என்பது ஒரு அரிதான மரபணு ரத்தக் கோளாறு. இதில், ரத்தக் கட்டிகள் உருவாகத் தேவையான உறைதல் காரணிகள் ரத்தத்தில் போதுமான அளவு இல்லாததால், காயம் ஏற்பட்டால் அல்லது அறுவை சிகிச்சை செய்துகொண்டால் ரத்தம் உறைந்து போவதில் சிக்கல் ஏற்படுகிறது. மரபு வழியாக இது ஆண்களை மட்டுமே பாதிக்கும். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த காயம் ஏற்பட்டாலோ, மூட்டுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில், உயிருக்கே ஆபத்தாக முடியும். இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மாற்றுத் திறனாளி சான்றிதழ், மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், நிரந்த மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.
இது குறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை கூறியது: கரூர் மாவட்டத்தில் 52 பேர் ஹீமோபிலியா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, மருத்துவத் துறையில் தற்காலிக மாற்றுத் திறனாளி சான்றிதழ்தான் வழங்குகின்றனர். நிரந்த மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது. நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நிரந்தர மாற்றுத் திறனாளி சான்றிழ் வழங்கப்படுகிறது.
எனவே, கரூர் மாவட்டத்தில் ஹீமோபிலியா பாதிப்பு உள்ளவர்களுக்கு நிரந்தர மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து வகையான ஊசிகளையும் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்க வேண்டும் என்றார்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் கூறியதாவது: ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பாதிப்பு சதவீதம் குறித்து மருத்துவ வழிகாட்டி கையேடு உள்ளது. அதன்படி, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.