புத்த சமய வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்படுமா? | இன்று - புத்த பூர்ணிமா


இன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் நிலையில், நம்மைச் சுற்றியுள்ள புத்த சமய வரலாற்று எச்சங்களை நாம் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கவுதம புத்தர் கி.மு.563-க்கும் கி.மு. 483-க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பவுத்த சமயம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் பவுத்த சமயத்தை பற்றி மணிமேகலை வீரசோழியம், குண்டலகேசி, சித்தாந்த தொகை, விம்பசாரக் கதை போன்ற பல நூல்கள் கூறுகின்றன.

தமிழகம் முழுவதும் புத்த சமயத்தைச் சேர்ந்த எச்சங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பாண்டிய நாடான மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் புத்த எச்சங்களை பற்றி ஆய்வு செய்த அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் விஜயராகவன், ராஜ பாண்டி ஆகியோர் கூறியதாவது: பாண்டிய நாட்டில் புத்த எச்சங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை ஆரம்பகால பாண்டிய அரசின் தலைநகரமாகவும், வணிக மையமாகவும் விளங்கியது. இப்பகுதியில் கி.பி.1880-ம் ஆண்டைச் சேர்ந்த இரு புத்த சிலைகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆல்பட்ட விடுதி கிராமத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்ம சக்கரமும், மல்லலில் உள்ள காட்டுப்பகுதியில் புத்தர் சிலையும் காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சிற்பம் காணப்படுகிறது. இதேபோல், திண்டுக்கல் பள்ளபட்டியில் ஒரு புத்த சிற்பம் காணப்படுகிறது. அந்த சிலையானது, தற்போது மதுரை திருமலை நாயக்கர் மகால் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், எல்லப்பட்டியில் வைகை நதி நடுவே தலையில்லாத புத்த சிற்பம் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கீழப் பார்த்தி பனுாரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சிற்பம் ஒன்றும், தலையில்லாத புத்த சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், மாரநாடு பகுதியில் கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சிற்பம் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏகாம்பரேசுவரர் என்ற சிவன் கோயிலில் கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நின்ற நிலையிலான புத்தர் சிலை காணப்படுகிறது. இக்கோயில் விமானத்தில் நாசிக்கூடுகளிலும் புத்தரின் உருவங்கள் உள்ளன.

திருவாடானை அருகில் மணிகண்டி என்ற ஊரில் கிடைத்த கி.பி.14ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் ரோசனபட்டி கிராமத்தில் பெரிய கண்மாய் எதிர்புறம் உள்ள வயல் ஓரத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்றுப்பெறாத புத்தர் சிற்பம் காணப்படுகிறது.

இதன் மூலம் பவுத்த ஆலயங்கள். சிற்பங்கள் குறித்த கல் வெட்டுகள் பாண்டிய நாட்டில் கிடைக்காவிட்டா லும், அழிந்து போன பவுத்த பள்ளியில் இருந்து புத்தரின் சிற்பங்கள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன என்பதை அறிய முடிகிறது. புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இந்நாளில் புத்த சமய வரலாற்று எச்சங்களை நாம் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்றனர்.

x