பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கிலிருந்து எங்கள் விருந்தினர்கள் வெளியேறுவது மனவேதனை அளிக்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு தற்போது சுற்றுலா சென்றுள்ள பலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனர்.
இதற்காக, ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கேட்டுக்கொண்டது. மேலும் ஸ்ரீநகர் விமானங்களுக்கான ரத்து செய்தல் மற்றும் மறு முன்பதிவுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு நேற்று 4 கூடுதல் விமானங்களை இயக்கின.
இந்நிலையில், தேவை அதிகரிப்பு அடிப்படையில் விமான கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், 'எக்ஸ்' தளத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட பதிவில், “பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கிலிருந்து எங்கள் விருந்தினர்கள் வெளியேறுவது மனவேதனை அளிக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் ஏன் வெளியேற விரும்புகின்றனர் என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்து கொள் கிறோம்.
ஸ்ரீநகர் - ஜம்மு இடையிலான தேசிய நெடுஞ்சாலை, ஒரே திசை போக்குவரத்துக்காக மீண்டும் இணைக்கப் பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஸ்ரீநகர்- ஜம்மு இடையே போக்குவரத்தை எளிதாக்குமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.