காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி - பிரதமர் மோடி கண்டனம்


ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும்” என்று கூறியுள்ளார்

நடந்தது என்ன? - பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் பிற்பகலில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காடுகள், தெளிவான நீர் நிறைந்த ஏரிகள், பரந்த புல்வெளிகளுக்கு பெயர்பெற்ற இந்த பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும் என கூறப்படுகிறது. இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் நெருக்கமாக இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது.

x