முர்ஷிதாபாத் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: மே.வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு


கொல்கத்தா: முர்ஷிபாத் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு வக்பு திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்க சட்டமாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன.

இதையடுத்து, முர்ஷிதாபாத்தில் வன்முறையை தடுக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்நிலையில் முர்ஷிதாபாத் கலவரம், வக்பு சட்டம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முதல்வர் மம்தா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மம்தா கூறியதாவது:

முர்ஷிபாத் வன்முறைச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. பாதுகாப்புப்படையின் ஒரு பிரிவினர், மத்திய அமைப்புகள் மற்றும் பாஜக, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை எளிதாக்கி பதற்றத்தை தூண்டுகின்றன. வங்கதேச சக்திகள் இதில் ஈடுபட்டு இருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.

கொடுமையான வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடியை நான் வலியுறுத்துகிறேன். இந்தச் சட்டம் நாட்டை பிளவுப்படுத்தும். தன்னுடைய அரசியல் நோக்கத்துக்காக நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய உள்துறை அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.

முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் எல்லைக்கு அப்பால் வங்கதேசத்தில் இருந்து வந்த சக்திகளின் பங்கு இருப்பதாகக் எனக்கு செய்திகள் வந்துள்ளன. எல்லையைப் பாதுகாப்பது பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு இல்லையா? மாநில அரசு சர்வதேச எல்லையை பாதுகாப்பதில்லை. மத்திய அரசு, இந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. மத்திய உள்துறை அமித் ஷாவை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அவரது அரசியல் ஆதாயத்துக்காக நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

x