உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ல் பதவியேற்கிறார்


புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய், மே 14-ம் தேதி பதவியேற்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. இதையடுத்து மிக மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாயை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் சுமார் 6 மாதங்களுக்கு இப்பதவி வகிப்பார். கடந்த 2007-ல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இப்பதவிக்கு வந்த முதல் தலித் என்ற பெருமையை பெற்றார். அதன் பிறகு இப்பதவிக்கு வரும் இரண்டாவது தலித் சமூகத்தவர் பி.ஆர்.கவாய் ஆவார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி பதவி உயர்வு பெற்றார். முன்னதாக அவர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக, மும்பை முதன்மை அமர்விலும் நாக்பூர், அவுரங்காபாத், பனாஜி கிளை அமர்வுகளிலும் பணியாற்றினார்.

பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வுகளில் பி.ஆர்.கவாய் இடம்பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 2023-ல் உறுதி செய்தது. இந்த அமர்வில் பி.ஆர்.கவாய் இடம்பெற்றிருந்தார்.

அரசியல் நிதியுதவிக்கான தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த அரசியல் சாசன அமர்விலும் கவாய் அங்கம் வகித்திருந்தார். 2016-ம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்விலும் கவாய் இடம் பெற்றிருந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் அமரவாதியில் கடந்த 1960-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி பி.ஆர்.கவாய் பிறந்தார். 1985-ல் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

x