மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரம்: மம்தா மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு


லக்னோ: மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரத்தை மம்தா பானர்ஜி அனுமதித்துள்ளார் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம், கலவரமாக மாறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். வன்முறை தொடர்பாக 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உ.பி.யின் ஹர்தோய் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: மேற்கு வங்கம் பற்றி எரிவதை நீங்கள் பார்க்கலாம். மாநில முதல்வர் அமைதியாக இருக்கிறார். கலவரக்காரர்களை அமைதி காக்கும் நபர்கள் என அழைக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரத்தை மம்தா பானர்ஜி அனுமதித்துள்ளார், கலவரக்காரர்களை ஊக்குவித்துள்ளார்.

கடந்த 7 நாட்களாக முர்ஷிதாபாத் பற்றி எரிகிறது. அரசு அமைதியாக இருக்கிறது. இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அமைதி காக்கின்றன.

அவர்கள் மிரட்டலுக்கு மேல் மிரட்டல் விடுத்து வருகின்றனர். வங்கதேசத்தில் நடந்ததை வெட்கமின்றி ஆதரிக்கின்றனர். அவர்கள் வங்கதேசத்தை விரும்பினால் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய மண்ணில் சுமையாக உள்ளனர்?

வக்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி ஏழைகளின் சொத்துகளை கொள்ளையடிப்பதை கட்டுப்படுத்திய பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. திரும்ப வரும் நிலத்தில் மருத்துவமனைகள், ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கட்டப்படும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

x