பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஊழலில் முதலிடத்தில் இருப்பதாக யல்பர்கா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவும், முதலமைச்சர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகருமான பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கொப்பல் நகரில் பிராந்திய ஏற்றத்தாழ்வு தீர்வுக் குழு ஏற்பாடு செய்த மாவட்ட அளவிலான கலந்துரையாடலில் பேசிய பசவராஜ் ராயரெட்டி,"எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மாநிலத்தில் ஊழல் பெருமளவில் உள்ளது. பரவலான ஊழலால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்,
மேலும், “கடந்த காலத்தில், அரசு கட்டிடங்கள் 50 முதல் 60 ஆண்டுகள் உழைத்தன. ஆனால் இப்போது அவை வெறும் பத்து ஆண்டுகளுக்குள் இடிந்து விழுகின்றன. ஊழல், குறிப்பாக கல்யாண கர்நாடகாவில், பரவலாக உள்ளது. பெரிய அளவிலான ஊழல் இருக்கும்போது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும். அதிகாரிகள் அவர்கள் யாருக்கு கீழ் பணிபுரிகிறார்களோ, அதே வழியில் நடந்து கொள்கிறார்கள். முதலமைச்சர் வேறுவிதமாகக் கூறினாலும், ஊழல் குறித்த எனது கருத்து மாறாது”என்று அவர் கூறினார்.
22 வயதான டாக்டர் டி.எம். நஞ்சுண்டப்பா அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, மாநில அரசு பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் எம். கோவிந்த் ராவ் தலைமையில் கர்நாடக பிராந்திய ஏற்றத்தாழ்வு தீர்வுக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளில் ஊழல் குறித்த தனது அறிக்கையையும், தனது பெயருடன் சேர்க்குமாறு குழுவின் உறுப்பினர்-செயலாளரிடம் ராயரெட்டி கேட்டுக் கொண்டார்.