புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 25,000 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும் ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டது.
25,000 ஆசிரியர்களை நியமிப்பதற்காக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனுத் தாக்கல் செய்தது. ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது உறுதியானதால், இந்த நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேற்குவங்கத்தில் 25,000 ஆசிரியர்கள் நீக்கப்படுவதால், லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் இன்றி பாதிக்கப்படுவர். மேலும் இந்த உத்தரவு, சேவை செய்யவேண்டும் என்ற ஆசிரியர்களின் மனஉறுதியையும் பாதிக்கும். ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்திருந்தால், அது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்துக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும்.
ஆனால் முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நிகராக, தகுதியான முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களையும் நடத்துவது மிகப் பெரிய அநீதி. நியாயமான முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளனர். இவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மாணவர்கள் போதிய ஆசிரியர்கள் இன்றி தவிப்பர்.
ஆசிரியர்களின் சேவை மனப்பான்மை பாதிப்பதோடு, ஆசிரியர்களின் வருமானத்தை நம்பியிருந்த குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். எனவே, ஆசிரியராக பணியாற்றியுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆசிரியர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு, தகுதியான முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பணியை தொடர மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.