[X] Close

'அப்ரிடி கூறியதைப் புத்திசாலி பாகிஸ்தானியர்கள் ஏற்பார்கள்': சிவசேனா கருத்து


sivasena-about-afridi

  • kamadenu
  • Posted: 16 Nov, 2018 14:52 pm
  • அ+ அ-

பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியதை புத்திசாலித்தனமான, நடுநிலையான பாகிஸ்தானியர்கள் ஏற்பார்கள் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இங்கிலாந்தில் ’மாணவர்கள் நாடாளுமன்றத்தில்’ பேசி இருந்தார். அதில், “ பாகிஸ்தான் காஷ்மீரைக் கேட்கவில்லை. இந்தியாவுக்கும் காஷ்மீரைக் கொடுக்க வேண்டாம். காஷ்மீர் மாநிலத்தைச் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட்டால் குறைந்தபட்சம் மனிதநேயம் உயிருடன் இருக்கும். மக்கள் உயிரிழப்புகளைச் சந்திக்காமல் இருப்பார்கள்.

4 மாநிலங்களைக் கூட பாகிஸ்தானால் நிர்வகிக்க முடியாது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம். அங்கு மிகப்பெரிய பிரச்சினையே மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்து வருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனையானது'' என்று பகீர் கருத்து தெரிவித்தார். பின்னர் நான் அவ்வாறு கூறவில்லை இந்திய ஊடகங்கள் திரித்துகூறின என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷாகித் அப்ரிடி கூறிய கருத்தை சிவசேனா கட்சியும் வரவேற்றுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் அப்ரிடி கருத்து குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஇருப்பதாவது:

ஊழலுக்கும், தீவிரவாதத்துக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததால், பாகிஸ்தான் ஏழையாகிக்கொண்டிருக்கிறது. கடைசியாக முன்னாள் பிரதமர் இல்லத்தில் இருந்த வாகனங்களையும், கால்நடைகளையும் விற்பனை செய்து ஆதரவு அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

மிகப்பெரிய நிதிச்சிக்கலில் பாகிஸ்தான் இருக்கிறது. ஐஎம்எப் அமைப்பிடம் தனது நிதிநிலைமைக் கூறி உதவிகேட்டபோது, அது நிராகரித்துவிட்டநிலையில், தற்போது சீனாவிடம் கையேந்தி நிற்கிறது பாகிஸ்தான்.

அந்தநாட்டின் பொருளாதாரம் உயிர்பெற்று சீராகச் செல்ல நிதி உதவி எனும் ஆக்சிஜன் அவசியம். அப்படி இருக்கும்போது, அந்த நாடு எப்படி காஷ்மீரை பாதுகாக்க முடியும். ஷாகித் அப்ரிடி மட்டுமல்ல, நடுநிலையான, புத்திசாலி பாகிஸ்தானியர்கள் அனைவரும் அப்ரிடி கூறிய கருத்துக்களை ஆதரிப்பார்கள், அதே சிந்தனையில்தான் இருப்பார்கள்.

பாகிஸ்தானிய அரசும், ராணுவத் தலைவரும் அந்நாட்டு மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்வதற்கு பதிலாக, இந்தியாவைச் சேதப்படுத்துவதற்கு அதிகமான ஊக்கத்தையும், உந்துசக்தியையும் அளிக்கிறார்கள். அதனால்தான் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்பும், அந்நாடு உதவிக்காகக் கையேந்தி நிற்கிறது.

எப்படியாகினும், பாகிஸ்தானிய வீரர் ஷாகித் அப்ரிடி என்பவர் இந்தியாவுக்கு விரோதமானவர்தான். ஏனென்றால், இதற்கு முந்தைய காலத்தில் அவர் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி இருக்கிறார். உதாரணமாக, இந்தியப் பகுதிக்குள் நுழைந்த 13 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றபோதிலும் கூட தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், காஷ்மீரின் சுதந்திரத்துக்காகவும் பேசுகிறார்

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close