[X] Close

'பில் இல்லையா? உணவு இலவசம்': இந்திய ரயில்வே அதிரடி


no-food-bill-no-payment-railways

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Mar, 2018 22:32 pm
  • அ+ அ-

இந்திய ரயில்வே நிர்வாகம் 'பில் இல்லையா? உணவு இலவசம்' என்ற புதிய கொள்கையினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கொள்கை முடிவை ரயில்வே நிர்வாகம் எடுக்கக் காரணம், ரயில்களில் வழங்கப்படும் உணவுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணக் கொள்ளை குறித்த பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்கள்.


பொதுவாக, பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்களில் இதுபோன்ற அறிவிப்புப் பலகைகளை நாம் பார்த்திருப்போம். உணவு பதார்த்தங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க இத்தகைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். அதனைப் பின்பற்றிதான் மத்திய ரயில்வே அமைச்சரும் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.


இது குறித்த விளம்பரங்கள் இந்திய ரயில்வேயின் டிக்கெட் புக்கிங் இணையதளமான ஐஆர்சிடிசி-யில் வெளியாகியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதள டிக்கெட்களில் இனி 'பில் இல்லையா? உணவு இலவசம்' என்ற வாசகமும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் டிக்கெட்டின் பின் பகுதிகளில் அச்சிடப்பட உள்ளது.


அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும் இந்த அறிவிப்புப் பலகைகள் வைப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இது குறித்து உத்தரவும் அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதுதவிர உணவுக்கு ஏற்ற விலைதான் பெறப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஆய்வாளர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


ஒருவேளை பில் கொடுத்து, உணவு வாங்கினால் அதில் அதிக விலை குறிப்பிட்டிருந்தால், அதையே ஆதாரமாகக் கொண்டு கேட்டரிங் சேவை வழங்குநர் மீது புகார் தெரிவிக்க எளிதாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


சதாப்தி ரயில்களில் உணவுக்கும் சேர்த்து முன்கூட்டியே கட்டணம் பெறப்பட்டுவிடுவதால் அத்தகைய ரயில்களில் இந்த வாசகம் இடம்பெறாது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close