மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பரிதவிப்பு - நடந்தது என்ன?


பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் சங்கம் காட் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இன்று (ஜன.29) மவுனி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகம் காணப்பட்டது. இந்த சூழலில் கும்பமேளாவில் சங்கம் காட் என்ற பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிசிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜ் கும்பமேளா சிறப்பு அதிகாரி அகன்க்ஷா ராணா தெரிவித்துள்ளார். நெரிசலில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்.

வடஇந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த புனித தினத்தை முன்னிட்டு அம்ரித் கால ஸ்தானம் (அதிகாலை நேர புனித நீராடல்) முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அங்கு பக்தர்கள் அதிகம் திரண்டது நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

கள நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு பேசி, அறிந்தனர். பக்தர்கள் சங்கம் காட் பகுதியை தவிர்க்குமாறு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கியது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதற்கு மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச மாநில அரசு தான் காரணம் என குற்றச்சாட்டு வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

x