ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பண்டிப்போரா மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் சிறப்பு வாகனத்தில் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். எஸ்.கே.பாயின் பகுதியில் ராணுவ வேன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 2 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பண்டிப்போரா பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோசமான வானிலை காரணமாக பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. உள்ளூர் மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ராணுவத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2023 ஆகஸ்டில் லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த நவம்பரில் ராஜோரி, ரியாசி பகுதிகளில் ராணுவ வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து 5 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி பூஞ்ச் பகுதியில் ராணுவ வேன் பள்ளத்தில் விழுந்து 5 வீரர்கள் உயிரிழந்தனர்.