[X] Close

உங்கள் சேவை ஜனநாயகத்துக்கு தேவை!- அத்வானிக்கு சித்தராமையா ஒரு சூசக வாழ்த்து


your-guidance-is-required-in-protecting-our-democracy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 13:38 pm
  • அ+ அ-

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்தராமையா அதிலொரு சூசகத்தையும் மறைத்து வைத்திருக்கிறார்.

ட்விட்டரில் சித்தராமையா பதிவிட்ட வாழ்த்து செய்தி இதுதான்.

"பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களுக்கு ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வு அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்நாட்டில் ஜனநாயகம் படுபயங்கரமான ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அதைக் காக்க உங்களது அறிவுரை தேவை. உங்களது அனுபவத்தையும் பதவி மூப்பினையும் மதிக்காத மார்க் தர்ஷக் மண்டலைக் காட்டிலும் உங்கள் வழிகாட்டுதல் ஜனநாயகத்தைக் காக்க தேவைப்படுகிறது" இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

பாஜக, தனது கட்சியின் மூத்த தலைவர்களை அதாவது 75 வயதுக்கு மேல் ஆனவர்களை மார்க் தர்ஷக் மண்டல் (வழிகாட்டி குழுவில்) அலங்கரித்து வைத்திருக்கிறது. வெறும் அலங்கார பதவியை மூத்த தலைவர்களுக்கு வழங்கியிருப்பதை இடித்துரைக்கும் விதமாக சித்தராமையா இந்த ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார்.

மற்றொருபுறம் அத்வானி பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தும் தொணியிலும் இந்த ட்வீட் அமைந்துள்ளது. 
அண்மையில் கர்நாடகாவில் நடந்து முடிந்து 5 தொகுதி இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவானது வரவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இத்தகைய சூழலில் சித்தராமையாவின் இந்த ட்வீட் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close