[X] Close

‘‘சபரிமலை தந்திரி என்னிடம் கேட்டுதான் செயல்பட்டார்’’ - பாஜக தலைவர் பரபரப்பு பேச்சு: வைரலாகும் வீடியோ


sabarimalai-issue

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 17:06 pm
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்கள் நுழைந்தால் நடையை சாத்தி விடுவதாக தந்திரி என்னிடம் பேசிவிட்டு தான் அறிவித்தார் என பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது .அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது குறிப்பிட்ட வயது பெண்கள் கோயிலுக்குள் வந்தால் நடையை சாத்தி சுத்தி பூஜை செய்யப் போவதாக கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, நேற்று கட்சியின் இளைஞரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

சபரிமலை போராட்டம் என்பது பாஜவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதனை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாஜகவின் திட்டத்தின்படிதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, சில பெண்கள் அங்கு சென்றபோது நடையை அடைக்கப்போவதாக தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார்.

அவ்வாறு அவர் அறிவிக்கும் முன்பு என்னுடன் ஆலோசித்தார். இவ்வாறு அறிவித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா என கேட்டார். அதற்கு நான் ‘‘அவ்வாறு அறிவிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. அது நீதிமன்ற அவமதிப்பு என்றால் அது எனக்கும் பொருந்தும், பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் பொருந்தும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். பாஜக உங்கள் பின்னால் இருக்கிறது’’ எனக் கூறினேன்.

அதன் பிறகு தான் அவர் தைரியமாக அதனை அறிவித்தார். தந்திரியின் அறிவிப்புக்கு பிறகு தான் போலீஸார் பின் வாங்கினர். கோயிலுக்குள் பெண்கள் வராமல் தடுக்கப்பட்டனர்.

இவ்வாறு ஸ்ரீதரன் பிள்ளை பேசியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close