ஜம்மு - காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டப் பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலும் இதனுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இதேபோல் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அங்கு மக்களவைத் தேர்தல் முடிந்து பின்னர் தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் சிறப்பு சட்டம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு இதுவரை பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தும் பணிகள் விரைவில் துவங்கும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
“ஜம்மு - காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள் என அதிக அளவிலான மக்கள் வாக்களிப்பது தேர்தல் ஆணையத்துக்கு ஊக்கம் அளிக்கிறது. ஜனநாயகத்தின் வேர்கள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்கள் அரசாங்கத்தை அமைக்க தகுதியானவர்கள். அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை விரைவில் துவங்குவோம்.” இவ்வாறு ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!