இந்தியாவில் நிகழாண்டு கோடைக்கால மின் விநியோகத்தின் புதிய உச்சமாக நேற்று 240 ஜிகாவாட்டை எட்டியதாக மத்திய எரிசக்தி துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் எரிசக்தி துறை அமைச்சகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டு கோடை பருவத்தில் அதிகபட்ச மின்சார விநியோகம் செய்யப்பட்ட நாளாக நேற்று (மே 24) அமைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் ஏசி மற்றும் ஏர்கூலர் போன்ற குளிரூட்டும் சாதனங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தினசரி மின் தேவை அதிகரித்து வருகிறது. நேற்று நாட்டில் இந்த சீசனில் அதிகபட்சமாக 239.96 ஜிகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இது 236.59 ஜிகாவாட்டாகவும், கடந்த புதன்கிழமை, உச்ச மின் தேவை 235.06 ஜிகாவாட்டாகவும் இருந்தது. ஒட்டமொத்த அளவில் அதிகபட்ச மின் தேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 243.27 ஜிகாவாட் என்ற அளவு பதிவானது.
இந்நிலையில் நடப்பு கோடைப் பருவத்தில் வரும் நாள்களில் இந்த மின் தேவை அளவு கடக்கப்பட்டு, புதிய சாதனை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் நடப்பு மே மாதத்தில் பகல் நேரத்தில் 235 ஜிகாவாட், மாலை நேரங்களில் 225 ஜிகாவாட் மின் தேவையும், ஜூன் மாதத்தில் பகல் நேரத்தில் 240 ஜிகாவாட், மாலை நேரங்களில் 235 ஜிகாவாட் மின் தேவையும் ஏற்படும் என கணித்திருந்தது.
ஜூன் மாத மின் தேவையை, இம்மாதமே எட்டியுள்ளதால், இந்த கோடை காலத்தில் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகாவாட்டை எட்டும் என எரிசக்தி அமைச்சகம் கணித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!