உணவுப் பொருட்களில் அதிகம் பூச்சிக்கொல்லி பயன்பாடு... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!


உச்சநீதிமன்றம்

உணவுப் பொருட்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு (எப்எஸ்எஸ்ஏஐ) உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், வழக்கறிஞருமான ஆகாஷ் வசிஷ்டா என்பவர் மூத்த வழக்கறிஞர் அனிதா ஷெனாய் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

அதில், “உணவுப் பயிர்கள், உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயன பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு, செயற்கை வண்ணமயமாக்கல், பருப்பு வகைகள், உணவு தானியங்கள் மற்றும் பிற பொருட்களில் மெழுகு பூச்சு போன்றவை நாடு முழுவதும் அதிக இறப்புகளுக்கு வழிவகுக்கிறது.

அதிகரித்த பூச்சிக்கொல்லி பயன்பாடு

பூச்சிக்கொல்லி நிறைந்த உணவுகளை உட்கொள்வது புற்றுநோய்கள், பிற அபாயகரமான நோய்களுக்கு முதன்மையான மற்றும் முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறித்து அறிந்தபோதிலும், மத்திய அரசும் அதன் அதிகாரிகளும், அதிகரித்து வரும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குறைக்கவும் முற்றிலும் தவறிவிட்டனர்.

எனவே, உணவுப் பயிர்கள், உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் அல்லது வேறு ஏதேனும் கனிம ரசாயனப் பொருட்கள் பயன்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாடு தொடர்பான தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுசீரமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

எப்எஸ்எஸ்ஏஐ, இந்திய அரசு

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனிதா ஷெனாய், "மனுதாரர் நாடு முழுவதிலுமிருந்து சேகரித்த தரவுகளின் மூலம், பூச்சிக்கொல்லிகளால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மத்திய அரசு, எப்எஸ்எஸ்ஏஐ ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

x