அசாம் தடுப்பு மையத்தில் உள்ள 17 வெளிநாட்டினரை நாடு கடத்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீது எந்தக் குற்றமும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் பல ஆண்டுகளாக, ஏராளமான வெளிநாட்டவர்கள் தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, அசாம் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் சட்ட சேவைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் அசாமில் உள்ள தடுப்பு மையத்தில் 17 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த 17 வெளிநாட்டவர்கள் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை.
எனவே, அவர்களை நாடு கடத்துவதற்கு இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என தெரிவித்தனர்.
மேலும், தடுப்பு மையங்களில் வழங்கப்படும் வசதிகளைக் கண்டறிய அங்கு செல்ல ஒரு குழுவை அமைக்குமாறு அசாம் சட்ட சேவைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!