நாகை, இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாகையிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட்டது. நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் 'செரியபானி' என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடைந்தது. குறைவான பயணிகள் மற்றும் சீதோஷ்ண நிலையை காரணம் காட்டி இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வருகின்ற மே மாதம் 13 ஆம் தேதி சிவகங்கை என்ற பெயர் கொண்ட புதிய கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி நாளை முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பதால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும்.
இந்த சூழலில்தான் நாளை தொடங்க இருந்த நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.