நடிகை கரீனா கபூருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்... ‘பைபிள்’ வார்த்தையால் சர்ச்சை!


நடிகை கரீனா கபூர்

கர்ப்பம் குறித்த தனது புத்தகத்தின் தலைப்பில் 'பைபிள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நடிகை கரீனா கபூருக்கு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'கரீனா கபூர் கானின் கர்ப்ப பைபிள்: தாய்மார்களுக்கான உயரிய கையேடு' என்ற தலைப்பில், கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடிகை கரீனா கபூர் எழுதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த புத்தகத்தின் தலைப்பு கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என கூறி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி என்பவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

கரினா கபூரின் கர்ப்பம் குறித்த தாய்மார்களுக்கான புத்தகம்

அவர் தனது மனுவில், 'பைபிள்' என்ற வார்த்தை மலிவாக பிரபலம் அடையும் நோக்கத்தில் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஆட்சேபனைக்குரியது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இதற்காக நடிகை கரீனா கபூர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கிறிஸ்டோபர் ஆண்டனி வலியுறுத்தியிருந்தார்.

ஜபல்பூரை சேர்ந்த இவர் முன்னதாக அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் இது தொர்பாக புகார் அளித்தார். ஆனால் இவரது புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அதன் பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அதைத் தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்

அந்த இரு நீதிமன்றங்களும் கிறிஸ்டோபர் ஆண்டனியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டன. இதைத் தொடர்ந்து, அவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்குத் தொடர்பாக நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 1ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x