அசாமில் நிலச்சரிவு காரணமாக சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் திரிபுராவுக்கு கடந்த 2 வாரங்களாக எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது, எனவே திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதுகுறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், “வியாழக்கிழமை இரவு கணராஜ் சவுமுஹானி பெட்ரோல் பம்ப் தவிர அகர்தலா நகரில் உள்ள ராதாநகர், சந்திராபூர், கல்யாணி பெட்ரோல் பங்க்குகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. பெட்ரோல் பங்க்-களில் கூடுதல் எரிபொருளை வழங்க கேட்டு பலர் பிரச்சினை செய்தனர்.
பெட்ரோல் பம்ப் முன் போராட்டம் நடத்தியவர்களை கலைக்க நேற்று இரவு கணராஜ் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று இரவு 11 மணியளவில் எரிபொருள் இருப்பு காலியானதால் பெட்ரோல் பம்ப்கள் மூடப்பட்டது. ஆனால் டோக்கன்களுடன் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு மறுநாள் காலையில் எரிபொருள் கொடுப்பதாக பம்ப் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்காத சில மர்மநபர்கள் வன்முறையை ஏற்படுத்த முயன்றனர்” என்று கூறினார்கள்.
கிழக்கு அகர்தலா காவல் நிலையத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “மாநிலத்தில் எரிபொருள் நெருக்கடி உள்ளது. அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் எரிபொருள் கட்டுப்பாட்டுடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் கட்டுப்பாடு விநியோக முறை தொடங்கப்பட்டதால், சட்டம் ஒழுங்கு நிலைமையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டோம். பல பெட்ரோல் பங்க்குகள் முன்பு நீண்ட வரிசைகள் உள்ளன. எரிபொருள் கிடைக்காதவர்களே பிரச்சினை செய்கின்றனர். இது தொடர்பாக ஒரு குற்றவாளியை கைது செய்து இன்று நீதிமன்றத்திற்கு அனுப்பினோம்” என அந்த அதிகாரி கூறினார்.
இதுபற்றி உணவு மற்றும் சிவில் சப்ளைகள் துறையின் மாநில அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கூறுகையில், “நிலைமையை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு செயல்பட்டு வருகிறது. அசாம் வழியாக போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் என்பது முன்னரே தெரியும். இந்த சூழ்நிலையில் வியாபாரிகள் செயற்கையான பற்றாக்குறையை தூண்ட வேண்டாம். அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் தேவையால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நிலைமையை எவ்வாறு இயல்பாக மாற்றுவது என்பது பற்றி நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் ”என்று அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், இந்த நெருக்கடி குறித்து முதல்வர் மாணிக் சாஹா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
திரிபுரா மாநிலம் அசாம் மற்றும் மேகலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ளது. திரிபுராவின் அண்டை மாநிலமான அசாமின் ஜடிங்காவில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு எல்லை ரயில்வேயின் லும்டிங் பிரிவின் கீழ் ஜடிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்கஜாவோ ரயில் நிலையத்திற்கு இடையே சரக்கு ரயிலின் இன்ஜின் தடம் புரண்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் ரயில் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திரிபுராவிற்கு பெட்ரோல், டீசல் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால், பெட்ரோல், டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. பைக்குகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.500 மட்டுமே பெட்ரோல் போட வேண்டும். பேருந்துகளுக்கு 60 லிட்டர் டீசலும் மினி பேருந்துகளுக்கு 40 லிட்டரும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு 15 லிட்டர் டீசலும் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று திரிபுரா மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் திரிபுரா மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.