குஜராத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு 200 மதிப்பெண்களுக்கான தேர்வில் 212 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தேர்வுகளில் முழு மதிப்பெண் பெறுவது என்பது எல்லா தரப்பு மாணவர்களின் கனவு மற்றும் லட்சியங்களில் ஒன்றாக இருக்கும். அவ்வப்போது நூற்றுக்கு நூறு, இருநூறுக்கு இருநூறு ஆகிய மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பாராட்டுகளை குவிக்கும். ஆனால், குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் மதிப்பெண் பட்டியலை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
குஜராத்தை சேர்ந்த வன்ஷீபன் மணீஷ்பாய் என்ற மாணவி, தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். சமீபத்தில் அவருக்கு ஆண்டு இறுதித் தீர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. அதில், கணக்குப் பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 212 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும், குஜராத்தி மொழிப்பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 211 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வன்ஷீபனின் பெற்றோர் பள்ளியைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
அதற்கு, கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு தவறு(!) காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்ட புதிய மதிப்பெண் பட்டியல் அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தி மொழிபாடத்தில் 200 க்கு 191 மதிப்பெண்களும், கணக்கு பாடத்தில் 200 க்கு 190 மதிப்பெண்களும் எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே குளறுபடியுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலானதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த மதிப்பெண் பட்டியலை பதிவிட்டு, சிலர் ‘இது குஜராத் மாடல் பட்டியல்’ என கலாய்த்து வருகின்றனர். மதிப்பெண் பட்டியலில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு மும்பை பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பு படித்த மாணவர்களில் சிலருக்கு 100 -க்கு 115 மதிப்பெண்கள் வரை வாரி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...