பாலியல் வீடியோ பிரச்சினையில் சிக்கிய ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய பேட்டியில், பிரஜ்வல் ரேவண்ணா போன்ற ஒருவரைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஜேடிஎஸ் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதித்துடன்,தேர்தல் முடிந்ததும் பாலியல் வீடியோக்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ஒக்கலிக்கா மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் தான் பிரஜ்வல் வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளனர், எனவே, இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் தான் உள்ளது என்று மோடி கூறினார். மேலும், பிரஜ்வலிடம் ஆயிரக்கணக்கான வீடியோ இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வீடியோக்கள் சேகரிக்கப்பட்டது ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்த காலம் என்பதை உணர்த்துகிறது. இந்த வீடியோக்கள் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சேகரிக்கப்பட்டு, தேர்தலின் போது வெளியிட்டுள்ளனர்.
பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு அனுப்பப்பட்ட பின்னர் வீடியோக்கள் வெளியிடப்பட்டன, மாநில அரசுக்கு இப்பிரச்சினை குறித்த கவலையிருந்தால் விமான நிலையத்தில் கண்காணிப்பு இருந்திருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, ஆனால், நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று கர்நாடகா அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஒரு அரசியல் விளையாட்டு. இந்த வீடியோக்கள் அவர்கள் கூட்டணியில் இருந்த காலத்திலிருந்தே குவித்தவை என்பது அவர்களுக்குத் தெரியும். இது எனது பிரச்சினை அல்ல, எனது பிரச்சினை என்னவென்றால், எந்தவொரு குற்றவாளியும் தப்பிக்கூடாது.
மோடியைப் பொறுத்த வரையில், பாஜகவைப் பொறுத்த வரை, நமது அரசியல் சாசனத்தைப் பொறுத்த வரையில், அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையே இருக்கக்கூடாது என்பது எனது தெளிவான கருத்து. அனைவரையும் பயன்படுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோடி கூறினார்.
கடந்த 2018 தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை நடத்தி, 2019 மக்களவைத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டு பிரிந்தன என்பது குறிவைத்தே பிரதமர் மோடி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.