பெங்களூருவில் சாலையில் சென்றவர்களை வெறிநாய் ஒன்று துரத்தி துரத்திக் கடித்தது. இதில் இரண்டு சிறுவர்கள் உள்பட 7 பேர் கடுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் யலஹங்காவில் உள்ள கொண்டப்பா லே அவுட் சாலையில் நேற்று மாலை நடந்து சென்றவர்களை வெறிநாய் ஒன்று துரத்தி துரத்திக் கடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளின் கதவுகளைச் சாத்திக் கொண்டனர். வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுவர்கள், ஒரு பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு யலஹங்கா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெநிநாய் கடித்ததில் யலஹங்காவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், மணிப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், இரண்டு சிறுவர்கள், ஒரு பெண் அடங்குவார்கள்.
அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்," யலஹங்காவில் ஏராளமான தெருநாய்கள் திரிகின்றன. அன்றாடம் பள்ளிக்குச் செல்பவர்கள், சாலையில் செல்பவர்களை நாய்கள் கடித்து வருகின்றன. எனவே தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களைக் கண்டறிந்து பிபிஎம்பி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை பெற உதவிட வேண்டும்" என்றனர்.
ஒரே நாளில் வெறிநாய் கடித்து 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.