இந்த ஆண்டில் இதுவரை 121 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கேரள மாநில மின்சார வாரியம் (கேஎஸ்இபி) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காட்டில் காட்டுப் பன்றி பிடிக்கும் போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு கேரளா மாநில மின்சார வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அத்துடன் மாநிலத்தில் எத்தனை மின்விபத்து நடந்துள்ளது என்ற விவரத்தையும் இன்று அது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், " இந்த ஆண்டு 265 விபத்துகளில் 121 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் சட்டவிரோத மின் பணியின்போதும், 17 பேர் மண் கசிவாலும், 15 பேர் உலோகக் கம்பங்களைப் பயன்படுத்தியும் உயிரிழந்துள்ளனர். கோயில் உற்சவத்திற்காக விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மின்சார வேலிகள் அறுந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியிருந்தால் இந்த விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம். மின்விபத்துகளைத் தடுக்க எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்களை பயன்படுத்த வேண்டும். அத்துடன் மின் கம்பிகளுக்கு அருகில் உலோகக் கம்பங்கள் அல்லது ஏணிகளைப் பயன்படுத்தக் கூடாது.
மேலும் விழாக் காலங்களில் தரம் குறைந்த பிளாஸ்டிக் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டாம். மின் அலங்காரம் செய்வதற்கு முன், அந்தந்த பகுதிகளின் மின் பிரிவு அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன் மின்சார ஆய்வாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே அழகுபடுத்தும் பணி பொறுப்பு வழங்க வேண்டும்," என்று அறிவுறுத்தியுள்ளது.