மணிப்பூரில் கொள்ளைபோன காவல்துறை ஆயுதங்கள்... உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்!


உச்ச நீதிமன்றம் - மணிப்பூர்

மணிப்பூர் வன்முறையின்போது போலீஸாரிடமிருந்து சட்டவிரோதமாக கொள்ளை போன ஆயுதங்களை மீட்பது தொடர்பான நிலை அறிக்கையை மணிப்பூர் அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. கடந்த 4 மாதங்களாக மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறையின்போது காவல் நிலையங்களில் இருந்த ஆயுதங்களை வன்முறையாளர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள்

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையின்போது போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளை போன ஆயுதங்களை மீட்பது தொடர்பான நிலை அறிக்கையை மணிப்பூர் மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. அதனை நீதிபதிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் மற்றொரு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்கு விவாதிக்கப்படும் அனைத்து பிரச்சினைகளும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதனை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கீதா மிட்டல் குழு பரிசீலித்து வருகிறது " என்றார்.

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர்

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

x