ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் இன்று இரண்டாவது நாளாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அம்மாநில சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், சந்திரபாபு மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டத்தை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் ஒத்திவைத்தார்.
பின்னர் கூட்டம் கூடிய பிறகும் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் 15 பேரை ஒரு நாள் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் 2வது நாள் பேரவை இன்று காலை கூடியது. அப்போது சபைக்கு வந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். நடிகரும், எம்.எல்,ஏவுமான பாலகிருஷ்ணா சட்டப்பேரவையின் உள்ளே ‘விசில்’ அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம், தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தெலுங்கு தேசம் கட்சியினரை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைவரும் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்களான நிம்மலா ராமாநாயுடு, புச்சரி சவுத்ரி, வெலகப்புடி ராமகிருஷ்ணா ஆகிய 3 பேரை இன்று ஒரு நாள் முழுவதும் சபைக்கூட்டத்தில் பங்கேற்கவும் தடை விதித்தார்.
சட்டசபை கூட்டத்தை 15 நிமிடம் சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதையடுத்து மீண்டும் சபை கூடியது. அப்போதும் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.