நிலவில் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நாளை மீண்டும் விழித்தெழ வைப்பதற்கான ஆயத்தப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி 14 நாட்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து முடித்து நிலவில் இருள் சூழும் காலத்தில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தூக்க நிலைக்கு சென்றுவிட்டது. அந்த 14 நாட்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்க வைக்கப்பட உள்ளது.
அதற்கான அனைத்து முயற்சிகளும் இன்றே தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் மீண்டும் வெற்றிகரமாக கண் விழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரயான்3ன் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சந்திரயான்-3ன் லேண்டர், விக்ரம், அல்லது அதன் ரோவர், பிரக்யான் இரண்டுமே நிலவு பயணங்களுக்கான பொதுவான ஹீட்டர்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது நடுங்கும் இந்த குளிரை தாக்கு பிடிக்க எந்த வசதியும் இரண்டிலும் செய்யப்படவில்லை. பொதுவாக ரேடியோஐசோடோப் ஹீட்டர் யூனிட்கள் (RHUs) எனப்படும் ஹீட்டர்கள், லேண்டர், ரோவர்களை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க, இது போன்ற கருவிகள் அவசியம்.
ஆனால் அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாததால் சந்திரயான்-3 நாளை கண் விழிக்குமா என்று நிலவில் நிமிடங்கள் திக் திக் என்று நகர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் தரையிறங்கும்போது ஏற்பட்ட கடைசி நேர தடுமாற்றத்தைக் கூட சரியாக கவனித்து சற்று தள்ளி சந்திரயான் தரை இறங்கியதும், அங்கிருந்து கொண்டே விக்ரம் லேண்டர் மூலம் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாலும் நிச்சயம் அவை நாளை கண் விழிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், அது மேலும் பல முக்கிய ஆய்வுகளை நடத்தும் என்று தெரிவித்துள்ளனர்.