முதல் 5 கட்ட தேர்தல்களில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எண்ணிக்கை விவரம் வெளியீடு


பிரதிநிதித்துவப் படம்

ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வாக்குப்பதிவு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. ஆனால், இந்த தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பான விவரங்கள் வெளியானதில் குழப்பம் ஏற்பட்டது.

வழக்கமாக, வாக்குப் பதிவு நாளின் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல்கள் வெளியாகும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர், எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற விவரத்தை தெரிவிப்பர். முழுத் தரவுகள் கிடைத்த பின் அது கணினியில் பதிவு செய்யப்படும். சில இடங்களில் வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்ததாக மறுநாள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் தேர்தல் அன்று அறிவிக்கப்பட்டதைவிட மறுநாள் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாக்குச்சாவடி (பூத்) வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், ‘‘ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்டுகின்றன. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதைகிறது. இதுபோன்ற மனுக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது என பதில் அளித்தது.

தேர்தல் முடிவடையும் நேரத்தில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது, தேர்தல் முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நேற்று முன்தினம் கூறிய உச்சநீதிமன்றம், தொகுதி வாரியாக வாக்குபதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என கூறிவிட்டது.

மக்களவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கனவே எழுந்தன. இந்நிலையில் முதல் 5 கட்டங்களில் மக்களவை தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.