பகீர்... வீட்டின் கிணற்றுக்குள் தவறி விழுந்த ‘புலி’; மீட்பு பணிகள் தீவிரம்!


வனப்பகுதிகள் அழிந்து வரும் நிலையில், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் இரை தேடி வரும் வன விலங்குகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நேற்று இரவு கேரள மாநிலம், வயநாடு பகுதியில், சுல்தான் பத்தேரி அருகே உள்ள மூணானக்குழியில், இரை தேடி சுற்றித் திரிந்த புலி ஒன்று, வழி தவறி அந்த பகுதியில் இருந்து ஒரு வீட்டின் கிணற்றில் தவறி விழுந்தது.

இரவு முழுவதும் கிணற்றுக்குள் இருந்தபடியே புலி உறுமிக் கொண்டிருந்ததை ஏதோ விநோதமான சப்தம் என்று அந்த பகுதி மக்கள் அசிரத்தையாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல், மோட்டார் சுவிட்ச் ஆன் செய்தும் வழக்கமான நேரத்திற்குள் தொட்டி நிரம்பாததால் வீட்டின் உரிமையாளர் ஸ்ரீநாத், கிணற்றில் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து கிணற்றை எட்டிப் பார்த்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றுக்குள் சிக்கிய புலி, மேலே பாய்ந்து தப்பிப்பதற்கு தயாராக காத்திருந்ததைக் கண்டு அலறியடித்தப்படி அங்கிருந்து நகர்ந்தவர், உடனடியாக இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

ஸ்ரீநாத் வீடு, அமைந்திருக்கும் பண்ணையின் ஒரு மூலையில் புதர்கள் படர்ந்த பகுதியில் அந்த கிணறு அமைந்திருந்தது. தகவல் அறிந்து உடனடியாக தெற்கு வயநாடு வன அலுவலர் ஷஜ்னா கரீம் உத்தரவின் பேரில், வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். டார்ட்டிங் நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையின் விரைவு மீட்புக் குழு உறுப்பினர்கள் என அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். கிணற்றில் இருந்து புலியை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x