போக்குவரத்து துறை Vs போலீஸ் அப்டேட் முதல் குஜராத் தீ விபத்து வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> போக்குவரத்து துறை vs காவல் துறை செயலர்கள் பேச்சுவார்த்தை: நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகளுக்கு பல இடங்களில் தமிழக போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். இதனால், இரு துறைகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். சட்ட ரீதியாக போக்குவரத்து மற்றும் காவல் துறை இடையே நடந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

> “அரசின் இரு துறைகள் மோதல்” - இபிஎஸ் சாடல்: “ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது. பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய காவல் துறை, போக்குவரத்துத் துறை இடையிலான பனிப்போரை தடுக்கத் தவறி ஓர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிய இந்த திமுக அரசின் போக்கை கண்டிக்கிறேன். உடனடியாக இப்பனிப் போரை சரி செய்ய உரிய உத்தரவு பிறப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

> தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்த காவலர் ஆறுமுகப்பாண்டியும், அவரிடம் பயணச்சீட்டு எடுக்கூறிய நடத்துநரும் கைக்குலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரகிறது.

அந்த வீடியோவில், காவலர் ஆறுமுக பாண்டியிடம், நடத்துநர், இந்தப் பிரச்சினை சமூக ஊடகங்களில் பரவி பிரச்சினையாகி இருக்கிறது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார். அதற்கு, காவலர் ஆறுமுக பாண்டி, “நானும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல், நாம் இரண்டு பேரும், இரண்டு துறைகளும் நண்பர்களாக பணியாற்றுவோம்” என்று கூறி இருவரும் ஆரத்தழுவி ஒருவருக்கு ஒருவர் சமாதானம் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வந்த நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்த சமாதான வீடியோ பதிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.

> ஜெயலலிதா குறித்த அண்ணாமலை கருத்துக்கு பதிலடி: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதேபோல் “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்த தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர். அவரது ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இந்த தமிழ் மண்ணில் வாழமுடிந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்துக்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது” என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார்.

> குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்: குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குரூப்-2 முதன்மைத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும், குரூப்-2ஏ முதன்மைத்தேர்வு அப்ஜெக்டிவ் டைப் எனப்படும் கொள்குறி வகையிலும் அமைந்திருக்கும்.

> அமைதியாக நிறைவடைந்த 6-ம் கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு சில தொகுதிகளில் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

> “அமைதி காக்கிறார் மோடி” - கார்கே: இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

> இண்டியா கூட்டணியினர் மீது மோடி பாய்ச்சல்: "இண்டியா கூட்டணி 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிர சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள். மற்றவர்களை அவர்கள் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

> வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் சனிக்கிழமை முதல் மே 31-ம் தேதி வரை சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர புயலாக வலுப் பெற்று, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கதேச - கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்கம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீ வரையிலான வேகத்திலும், இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

> மீம்ஸ் மூலம் பிரபலமடைந்த ‘கபோசு’ நாய் மரணம்: மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. 18 வயதான கபோசு மறைவு, நெட்டிசன்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

> குஜராத்தில் பயங்கர தீ விபத்து: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.