அவ்வளவு அவசரமா... ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன்பு 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட மத்திய அரசு ஒப்புதல்!


தேர்தல் நன்கொடை பத்திரம்

உச்ச நீதிமன்றம் தேர்தல் நன்கொடை பத்திரங்களை ரத்து செய்வதற்கு 3 நாள்களுக்கு முன்பு, தலா ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ஆயிரம் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தேர்தல் நன்கொடை

இந்தியாவில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என கூறி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பு வெளியாவதற்கு 3 நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் நிதி அமைச்சகம், தலா ரூ.1 கோடி மதிப்புள்ள 10 ஆயிரம் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு, 'செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' (எஸ்பிஎம்சிஐ) அமைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான 13 நாள்களுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 28ம் தேதி, புதிதாக பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் எஸ்பிஐ இடையேயான கோப்புகளில் உள்ள தகவல்களைப் பெற்றது. அதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.

இந்திய அரசு

அந்த தகவலின்படி, எஸ்பிஎம்சிஐஎல் ஏற்கெனவே 8,350 பத்திரங்களை தயாரித்து எஸ்பிஐ வங்கிக்கு அனுப்பியதும், மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதை உடனடியாக நிறுத்துமாறு எஸ்பிஎம்சிஐ-க்கு கடிதம் அனுப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது.

தனிநபர், நிறுவனங்கள் ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை பல மடங்குகளில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் வகையில் தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளில், பாஜக ரூ.8,451 கோடியும், காங்கிரஸ் ரூ.1,950 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,707.81 கோடியும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ரூ.1,407.30 கோடியும் நன்கொடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x