இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களைச் சேர்ந்த 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை தேர்தல் ஆணையத்தால் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதன்படி இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறும் 88 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 4 ஆகும். ஏப்ரல் 5-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜம்மு-காஷ்மீரில், ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.
அவுட்டர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாகவும், அதே தொகுதியில் உள்ள இதர 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம்கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.
அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏப்ரல் 26-ம் தேதி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றன.